Rs 450.00 Rs 500.00
Brand: Salamath Pathippakam
Product Code: SP06948
Availability: In Stock

பதிப்புரை

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. சலாத்தும் ஸலாமும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மீதும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், பின்பற்றாளர்கள் அனைவர்மீதும் உண்டாவதாக!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் எங்கள் ஸ்தாபனத்திலிருந்து   குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ், துஆக்கள் சம்பந்தமான பல நூல்கள் வெளிவந்துள்ளதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

உலகமறிந்த ஆலிம் பெருந்தகை மௌலானா தகீ உஸ்மானி ஹஜ்ரத் அவர்களால்  உர்துவில் மொழிபெயர்க்கப்பட்ட ஆஸான் தர்ஜமா என்ற குர்ஆன் தர்ஜமாவை, மௌலானா, மௌலவி  கி.முஹம்மது வலியுல்லாஹ் யூசுஃபி ஹஜ்ரத் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு “தர்ஜமதுல் குர்ஆனில் ஹகீம்” என்ற பெயரில் குர்ஆன் மொழி பெயர்ப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்! 

உலகம் இன்று இஸ்லாம் பற்றி அறிய வேண்டுமென்ற ஆழ்ந்த தாகத்தில் இருக்கிறது. இஸ்லாம் என்றால் என்ன? அது என்ன சொல்கிறது? என்பதனை ஆராய்வதற்காகவேண்டி அவரவர்கள் தாய் மொழியில் குர்ஆனை படித்து விளங்க ஆவல் கொள்கிறார்கள். அனைத்து சமுதாய மக்களும் குர்ஆனை எளிமையான தமிழில் படித்து பயனடையவேண்டும் என்று சுமார் 6 ஆண்டுகள் முயற்சி செய்து தற்சமயம் இதனை வெளியிடுகிறோம். அல்ஹம்து லில்லாஹ்!

உயர்ந்தோன் அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வானாக! இந்த குர்ஆன் தர்ஜமாவை படிப்பதின் மூலம் எளிதான முறையில் விளங்கி அமல் செய்வதற்கும், அனைத்துலக மக்களுக்கும் ஹிதாயத் என்ற நேர்வழியையும் கொடுப்பானாக! 

இந்த தர்ஜமா குர்ஆன் மூலம் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் எங்களது பெற்றோர்களுக்கும், உஸ்தாதுமார்களுக்கும் உலகில் உள்ள முஸ்லிமான, முஃமினான, ஆண், பெண் அனைவரது மஃபிரத்திற்கும், ஈருலக ஈடேற்றத்திற்கும் காரணமாக ஆக்கி வைப்பானாக!

என்றென்றும் இதுபோன்ற மார்க்கப் பணிகளில் ஈடுபட்டிருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு உதவிசெய்வானாக! மொழி பெயர்ப்பு செய்த மௌலானா மௌலவி கி.முஹம்மது வலியுல்லாஹ் யூசுஃபி ஹஜ்ரத் அவர்களுக்கும், இதனை மேலாய்வு செய்து தந்த மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி ஹஜ்ரத் அவர்களுக்கும், பிழைதிருத்தம் செய்து தந்த மௌலவி ஹாஃபிழ், முஹம்மது ஜகரிய்யா மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கும், இந்த குர்ஆன் மொழி பெயர்ப்பை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த  அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்  ஈருலகிலும் நற்பாக்கியங்களை நல்குவானாக! ஆமீன்.

ஸலாமத் பதிப்பகம்

சென்னை-1


மேலாய்வுரை
முனைவர் மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில். பிஎச்.டி.
(மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்)
ஆலங்குடி. 

எழுதுகோலால் கற்பித்த ஏக இறைவன் அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். எழுதுகோல் பிடித்து எழுதாமலே அவனியில் வாழும் மாந்தர்கள் யாவருக்கும் எக்காலத்திற்கும் இயைந்த தீர்க்கதரிசனங்களைத் தந்துவிட்டுச் சென்ற ஏகனின் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார், உற்ற தோழர்கள் யாவர்மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் நிறைவாய் உண்டாவதாக!

ஆசான் தர்ஜமா எனும் உர்து மொழியாக்கத்தைத் தழுவி, மௌலானா மௌலவி கி.முஹம்மது வலியுல்லாஹ் யூசுஃபி ஹஜ்ரத் அவர்கள் தமிழாக்கம் செய்த திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பை என்னிடம் கொடுத்து, மேலாய்வு செய்து தருமாறு ஸலாமத் பதிப்பகத்தாரின் உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் இம்மொழியாக்கத்தை என்னால் இயன்றவரை மேலாய்வு செய்து செவ்வையான பதங்களைத் தகுந்த இடங்களில் இட்டு, இது ஒரு செம்மொழித் தமிழாக்கமாய்த் திகழ வேண்டும் என்ற நன்னோக்கில் உருவாக்கியுள்ளேன். வாசிப்போருக்கு எந்தத் தடங்கலும் நெருடலும் ஏற்படாவண்ணம் மிக எளிதாகவும் இனிய நடையிலும் அமைத்துள்ளேன். குறிப்பாக ஒற்றுப்பிழை, சந்திப்பிழை, தட்டச்சுப்பிழை உள்ளிட்ட பிழைகளைக் களைந்து சரிசெய்வதில் மிகுந்த கவனம் செலுத்திப் பணியாற்றியுள்ளேன். எனவே வாசிப்போர் தெளிந்த நீரோடை போன்ற நடையை உணரலாம். 

இன்றைக்குப் பத்துக்கும் மேற்பட்ட திருக்குர்ஆன் தமிழாக்கங்கள் இருக்கின்றபோது இப்போது இன்னொரு தமிழாக்கம் தேவையா? என்ற வினா நிறையப் பேரின் உள்ளங்களில் தோன்றும். பத்துக்கும் மேற்பட்ட தமிழாக்கங்கள் இருந்தாலும் கால மாற்றத்திற்கேற்ப, மொழியின் வளர்ச்சிக்கேற்பத் தமிழ் நடையையும் தமிழ்ச் சொற்களையும் மாற்ற வேண்டியுள்ளது. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மொழியின் வளர்ச்சியும் மேலோங்கி வருகிறது. அதற்கேற்பத் தமிழாக்க நடையில் சில பல மாற்றங்களை அவ்வப்போது செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அது மட்டுமின்றி அறிவியல் வளர்ச்சிக்கேற்பத் திருக்குர்ஆன் வசனங்கள் பொருள் விரிந்து கொடுக்கும் தன்மையுடையன. அத்தகைய விசாலமான பொருட்செறிவோடுதான் திருக்குர்ஆன் அமைந்துள்ளது. எனவே காலத்திற்கேற்ற வகையில் தமிழாக்கத்தைச் சீர்செய்வதும் செம்மைப்படுத்துவதும் அவசியமாகும். 

மற்றொரு புறம் இன்றைய இளைஞர்களின் தமிழ் மொழியறிவு மங்கி வருவதைக் காணலாம். அவர்களிடம் பழங்காலத் தமிழாக்கத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னால் மலைத்துப்போய் விடுவார்கள்; பழந்தமிழ்ச் சொற்களின் பொருளறியாது திணறுவார்கள். இக்கால இளைஞர்களையும் வாசிக்கத் தூண்டுமுகமாகப் புதிய புதிய தமிழாக்கங்கள் தேவைப்படுகின்றன. ஆகவே இது அவர்களின் வாசிப்புக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பொதுவாக, திருக்குர்ஆன் அத்தியாயங்களின் பொருளையுணர்ந்து அந்த அத்தியாயங்களைத் தொழுகையில் ஓதினால், மேலோட்டமாக இருந்து வருகின்ற நம்முடைய தொழுகை உயிரோட்டமுடையதாக மாறும். ஒவ்வொரு வசனத்தின் பொருளும் நம்முடைய மனதில் பதிந்துவிடுகின்றபோது அதைத் தொழுகையில் அரபியில் ஓதுகின்றபோது உண்மையிலேயே நம்முடைய தொழுகையில் ஒரு மாற்றம் தெரியும். அதுமட்டுமின்றி அரபியில் நாம் ஓத ஓத அதை நிறுத்த மனம் இடங்கொடுக்காது. அவ்வளவு கருத்தாழமிக்கதாக உள்ளதைப் பொருளுணர்ந்து ஓதுகின்ற ஒவ்வொருவரும் அறியலாம்.

எனவே நம்முடைய தொழுகையை உயிரோட்டமானதாக மாற்றவும், திருக்குர்ஆன் வாசித்தலை அர்த்தமுடையதாக ஆக்கவும் தமிழாக்கத்தைப் படிப்பது அவசியமாகும். 

இதுபோன்ற தமிழாக்கத்தை நாம் வாசிப்பதோடு நம்மைச் சார்ந்த நண்பர்கள், உறவினர்கள், அண்டைவீட்டார், அறிமுகமானோர் அனைவருக்கும் வாங்கிக் கொடுக்கலாம்; வாங்கத் தூண்டலாம். இதனால் பிறருக்கு நன்மையை அறிவித்ததற்கான நற்கூலி நமக்குக் கிடைக்கும். 

திருக்குர்ஆன் பணியில் என்னை ஈடுபடுத்தி, அதன் நன்மையில் ஒரு பகுதியை நான் பெற்றுக்கொள்ளுமாறு செய்த ஏக இறைவன் அல்லாஹ்விற்கே புகழனைத்தும். இதை வாசிப்போருக்கும் இப்பணியில் ஈடுபட்டோருக்கும் இதை அச்சிட்டு வெளியிடுவோருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியைத் தருவானாக!   

இப்படிக்கு
 மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி